மம்தா பானர்ஜி தான் திரிணாமுல் காங்கிரஸ்.

05.06.2026 08:07:15

திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியில் ஏற்பட்டுள்ள கடுமையான உள்கட்சி குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா அதிருப்தி எம்எல்ஏக்களை "முற்றிலும் பயனற்றவர்கள்" என்று கடுமையாக சாடியுள்ளார். மம்தா பானர்ஜியின் செல்வாக்கை மட்டுமே நம்பி அரசியலில் பிழைப்பு நடத்திய இவர்கள், தங்களை திரிணாமுல் காங்கிரஸ் என்று அழைத்துக்கொள்ள தகுதியற்றவர்கள் என்று அவர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

 

மேற்கு வங்க சட்டப்பேரவையில் 58 அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சியின் சட்டமன்க் குழுவை கைப்பற்றி, நீக்கப்பட்ட எம்எல்ஏ ரிதாப்ரதா பானர்ஜியை தங்களின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த உடைப்பிற்கு பின்னால் பாஜகவின் மிரட்டல் அரசியல் இருப்பதாக மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, ஒவ்வொரு எம்எல்ஏவின் பலவீனத்தையும் அறிந்து, சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ சோதனை காட்டி மிரட்டி இந்த சதியை அரங்கேற்றியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், இந்த அதிருப்தியாளர்களுக்கு எதிர்க்கட்சியாக இருந்து பாடுபட துணிச்சல் இல்லை என்றும், தங்களை பாதுகாத்து கொள்ளவே கட்சி மாறியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். சின்னத்தையோ அல்லது கட்சியையோ அதிருப்தியாளர்கள் பறித்தாலும், மம்தா பானர்ஜி என்ற ஒற்றை ஆளுமையே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்றும், பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் எழுவோம் என்றும் மொய்த்ரா உறுதியளித்துள்ளார்.