IPL கிரிக்கெட் தொடர் மார்ச் 22இல் தொடக்கம்
IPL T20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22ஆம் திகதி தொடங்கும் என IPL தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
IPL T20 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் பொதுத்தேர்தல்தான். வரும் ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டங்களில் தான் IPL T20 தொடரின் போட்டிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக IPL அட்டவணை அறிவிப்பதில் தாமதம் நிலவுகிறது.
இந்நிலையில் IPL சேர்மன் அருண் துமால் கூறும்போது, “IPL தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்படும், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை விவரம் பொதுத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும்.
மார்ச் 22ஆம் திகதி தொடரை தொடங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். IPL போட்டி அட்டவணை தொடர்பாக அரசுத்துறைகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், முதலில் ஆரம்ப கட்ட போட்டிகளின் அட்டவணையை வெளியிடுவோம். முழு போட்டியும் இந்தியாவில் நடைபெறும்” என்றார்.
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் IPL தொடரின் முழு அட்டவணையும் வெளியாகும் என தெரிகிறது. 2009ஆம் ஆண்டு IPL தொடர், பொதுத் தேர்தல் காரணமாக தென் ஆபிரிக்காவில் நடத்தப்பட்டது. இதன் பின்னர் 2014ஆம் ஆண்டு தேர்தலையொட்டி IPL தொடரின் ஒரு பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இருப்பினும் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்ற காலங்களில் IPL தொடர் முழுவதுமே இந்தியாவில் நடத்தப்பட்டது.
இம்முறை வரும் ஜூன் 2ஆம் திகதி IPL T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ஆம் திகதி அயர்லாந்துடன் மோதுகிறது. T20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு IPL தொடரை மே மாதம் கடைசிக்குள் முடிக்கும் வகையில் போட்டி அட்டவணை தயாராகி வருகிறது. இதனால் IPL இறுதிப் போட்டி மே 26ஆம் திகதி நடத்தப்படக்கூடும் என கூறப்படுகிறது.