இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரி அழிக்கப்பட்டார்.

18.03.2026 13:49:01

இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரி கொல்லப்பட்டு இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இரு தரப்பும் எதிரி நாட்டின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேலின் அதிகார மையத்திற்கு நெருங்கிய உயர்மட்ட அதிகாரி கொல்லப்பட்டு இருப்பதாக ஈரானின் பார்ஸ்(Fars) செய்தி நிறுவனம் அந்நாட்டின் உளவுத்துறையை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இது ஒரு பிரம்மாண்டமான உத்திசார் வெற்றி என்று ஈரான் வர்ணித்துள்ளது.

அதே நேரம், கொல்லப்பட்ட உயர்மட்ட அதிகாரி யார்? அவரது பதவி என்ன? இந்த தாக்குதல் எங்கு, எப்போது நடத்தப்பட்டது என்பது போன்ற விவரங்களை ஈரான் இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அருகே ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றில், ஈரானிய அரசின் முக்கிய தூண்களாக கருதப்படும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் Basij துணை இராணுவ படையின் தளபதி குலாம்ரெசா சொலைமானி கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

இதில் தளபதி குலாம்ரெசா சொலைமானி மரணத்தை ஈரான் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி உயிருடன் இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகிறது.