இந்தியாவிடம் ஒன்றையே கேட்க விரும்புகின்றோம்

19.06.2021 09:21:00


இந்தியா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் இனியும் தலையிடவில்லை என்றால் 13 ஆவது திருத்தச் சட்டமும் இல்லாது போய்விடும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவிடம் ஒன்றையே கேட்க விரும்புகின்றோம்.தற்போது இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிடின் உங்களால் இனி எதனையும் செய்ய முடியாமல் போகும்.

மேலும், இலங்கை தீவுக்குள்ளே பூகோலம் நலன்சார்ந்த பிரச்சினையில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்த கோர் அமைப்பாக இருக்கலாம் அல்லது ஐரோப்பியா உள்ளிட்ட ஏதாவது ஒரு அமைப்பு, வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

குறித்த வாக்கெடுப்பை நடத்துவதன் ஊடாகவே எங்களுடைய மக்களின் தலைவிதியை அவர்களே தீர்மானிக்க கூடிய வாய்ப்பு ஏற்படும்.

அதுதான் நிரந்தர அரசியல் தீர்வாக இருக்கும். ஆகவே இவ்விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.