ஈரான் போரால் அமெரிக்காவுக்கு 25 பில்லியன் டொலர் செலவு.
ஈரானில் அமெரிக்கா நடத்தும் போருக்காக இதுவரை 25 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்று பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை (29) தெரிவித்தார்.
அந்தப் பணத்தின் பெரும்பகுதி வெடிமருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக பென்டகனின் கணக்காய்வாளராகப் பணியாற்றி வரும் ஜூல்ஸ் ஹர்ஸ்ட், பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவில் உள்ள சட்டமியற்றுபவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதலுக்கான இராணுவத்தின் செலவுத் தொகை குறித்த முதல் அதிகாரப்பூர்வ மதிப்பீடு இதுவாகும்.
அந்தச் செலவு மதிப்பீட்டில் என்னென்ன அடங்கியிருந்தன என்பதையும், மோதலில் சேதமடைந்த மத்திய கிழக்கிலுள்ள தள உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியமைப்பதற்கும் பழுதுபார்ப்பதற்கும் ஆகும் உத்தேசச் செலவுகள் அதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என்பதையும் ஹர்ஸ்ட் விவரிக்கவில்லை.
எவ்வாறெனினும், 25 பில்லியன் டொலர் செலவானது, இந்த ஆண்டுக்கான நாசாவின் முழு வரவுசெலவுத் திட்டத்திற்குச் சமமானது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் தங்களது பிரதிநிதிகள் சபை பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ள பெரும் சவாலை எதிர்கொள்ளக்கூடிய இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
எனினும், போரின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 11.3 பில்லியன் டொலர்கள் செலவானதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மதிப்பிட்டதாக கடந்த மாதம் ஒரு ஆதாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பென்டகன் 25 பில்லியன் டொலர என்ற தொகையை எவ்வாறு நிர்ணயித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.