போராட்டங்களை ஒடுக்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

11.04.2024 09:19:00

இலங்கையில் அமைதி வழியில் நடத்தப்படும் போராட்டங்களை ஒடுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

 

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நாட்டில் நடைபெற்ற 30 போராட்டங்களில், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிக பலத்தை பிரயோகித்ததாக சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், அமைதி வழியில் நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு, சட்டவிரோத பலவந்த பிரயோகத்திற்கு காரணமான அதிகாரிகளை நேரடி விசாரணைக்குட்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்தும் வரை, இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை அவசரமாக மீளாய்வு செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.