
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் உயர்த்தப்படும்.
2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
வீட்டு உரிமைப் பத்திரங்களைப் பெறும் 2,000 பயனாளிகளுக்கு ஜனாதிபதி அடையாளமாக சில உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்திருந்தார்.
வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு்ள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.