வட மாகாணசபையின் புதிய பிரதம செயலாளர் யார் ?

04.07.2021 09:00:00

 

வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய பிரதம செயலாளரை தெரிவு செய்வது தொடர்பில் ஆளும் கூட்டணியின் வடக்கு பிரமுகர்கள் பரிந்துரைத்தவர்கள் உட்பட்ட ஐவரில் ஒருவரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில், முன்னாள் பிரதம செயலாளர்கள் க.தெய்வேந்திரம், விஜயலட்சுமி ரமேஸ், கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோருடன் கொழும்பில் பணியாற்றும் பெண்மணி ஒருவர் உட்பட்ட ஐவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

குறித்த உயர் அதிகாரிகளில் சிலரை வடக்கில் பிரபலமான ஆளுங்கூட்டணிப் பிரமுகர்கள் இருவர் பரிந்துரைத்துள்ளமையால் தேர்வில் கொழும்பின் உயர் பீடம் நெருக்கடிகளைச் சந்தித்திருப்பதாகவும் தெரியவருகிறது. அ.பத்திநாதன் நாளை ஓய்வுபெற வேண்டிய நிலையிலும் இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் அவர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடக்கம் ஓய்வு பெற்றுவிட்டதாக தெரியவருகிறது.

இதனால் திங்கட்கிழமை புதிய செயலாளர் பதவி ஏற்கக்கூடும் என்ற போதிலும் அரசியல் பிரமுகர்களின் சிபார்சு காரணமாக புதிய செயலாளர் தெரிவில் தாமதம் ஏற்படக்கூடும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.