
ஏர் கனடா விமான சேவை ரத்து தொடரும்.
அரசு உத்தரவுக்கு பிறகும் பணியாளர்கள் பணிக்கு திரும்பாததால் ஏர் கனடா விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பிற கோரிக்கைகளை முன் வைத்து சனிக்கிழமை முதல் கிட்டத்தட்ட 10,000 பேர் தங்களது வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். இதனால் கிட்டத்தட்ட 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், ஏர் கனடா நிறுவனம் தங்களது சேவையை தற்காலிகமாக தடை செய்து இருப்பதாக அறிவித்தது. |
இந்நிலையில் கனடா அரசாங்கம் தலையிட்டு விமான ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டது. அரசாங்கத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து ஏர் கனடா நிறுவனமும் தங்களது சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என அறிவித்தது. ஆனால் விமான பணியாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கனேடிய பொது ஊழியர் சங்கம்(CUPE), “ஏர் கனடாவின் அழுத்தத்திற்கு கனேடிய அரசாங்கம் பணிந்துவிட்டது” எனவே உறுப்பினர்கள் யாரும் அந்த உத்தரவை ஏற்க வேண்டாம் என்று தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் ஏர் கனடா நிறுவனம் தங்கள் விமான சேவையை தொடர்ந்து நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் ஏர் கனடா நிறுவனம் மட்டுமல்லாமல் அதன் துணை நிறுவனமான ஏர் கனடா ரூஜ்-யும் தனது விமான சேவையை ரத்து செய்துள்ளது. |