
“வட மாநிலத்தவர்கள் ஏன் மும்மொழி படிக்கவில்லை?”
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கீரமங்கலம் வேம்பங்குடி மேற்கு கைப்பந்து கழகத்தின் சார்பில் 3 நாட்கள் நடக்கும் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கைப்பந்துப் போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் முன்னிலையில் தயாநிதி மாறன் எம்.பி. தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தயாநிதி மாறன் எம்.பி, செய்தியாளர்களிடம் பேசும் போது, “திமுகவினர் மீதும் பொய்யான வழக்குகளைப் போடுவதை வாடிக்கையாகப் பலர் கொண்டுள்ளனர். கலகம் இழுக்க வேண்டும் என்று என்று சிலர் செயல்படுகின்றனர். அதைச் சட்ட ரீதியில் சந்தித்து நாங்கள் வெற்றி பெறுகிறோம். அதன் அடிப்படையில்தான் இன்றைய நீதிமன்ற தீர்ப்பும் அமைந்துள்ளது. |
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்தியாவிலேயே முதல் குரலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் உயர்ந்துள்ளது. பாஜக தீய எண்ணத்தோடு இந்தியாவை இந்தி பேசும் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஆள வேண்டும் எனத் துடிக்கின்றனர். அதற்கு முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்து ஒலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆதரவாகத் தென் மாநில குரல்களும் வந்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் தமிழக முதல்வர் நிச்சயம் வெற்றி பெறுவார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் உள்ளது. தமிழும், ஆங்கிலமும் படித்த எங்களது பிள்ளைகள் சிறப்பான முறையில் சாதனை படைத்து வருகின்றனர். கூகுள் நிறுவனத் தலைவரே இரு மொழி தான் படித்தவர் தான். வடநாட்டவர்கள் ஏன் மும்மொழி படிப்பதில்லை. எங்கள் பிள்ளைகள் மட்டும் மும்மொழி படிக்க வேண்டுமா..?. இந்த விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் கேலி செய்கிறார். தென்னிந்திய எல்லையைத் தாண்டினால் சோறு சாப்பிட முடியாது எனக் கூறுகிறார். தேவை என்றால் அவர்கள் ஆங்கிலம் படிக்கட்டும். எங்களுக்குத் தேவை என்றால் நாங்கள் எந்த மொழியையும் படிக்கத் தயார். கிரிக்கெட்டில் ஒரு சமூகத்தின் ஆதிக்கம் உள்ளதா இல்லையா என்பதை, இந்தியாவிற்காக யாரெல்லாம் விளையாடுகிறார்கள் தமிழகத்திற்காக யாரெல்லாம் விளையாடுகிறார்கள் என்ற பெயரைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்” என்றார். |