முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் திருமாவளவன் எம்.பி.!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அதே சமயம் முதல்வரின் இந்த அமெரிக்கப் பயணத்தில் மொத்தமாகத் தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. |
இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 13ஆம் தேதி சென்னை புறப்பட்டார். அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரை அங்கிருந்த தொண்டர்கள் வழி அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து துபாய் வழியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில் அமெரிக்கா பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நாளை (16.09.2024) காலை 11 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மதுவிலக்கு தொடர்பாக விசிக சார்பாக நடத்தும் மாநாட்டில் அதிமுகவினரும் பங்கேற்கலாம் என தொல். திருமாவளவன் தெரிவித்து அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. மேலும் தொல். திருமாவளவன் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் அடங்குவதற்குள், ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகிப் பேசு பொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. |