மணல் கொள்ளையில் ஈடுபடக் கூடாது!
ஜக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர்களாக நியமனம் பெற்றவர்கள் கிராமங்களில் அடாவடி செய்தல் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபடக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கான 43 வட்டார அமைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிரதேசங்களில் உள்ள பிரச்சனைகளை அமைச்சுகளுக்குத் தெரியப்படுத்தி, அவற்றை நிவர்த்தி செய்ய நாங்கள் முன்னின்று உழைப்போம். இன்று கட்சியினால் நியமிக்கப்படுபவர்கள் ஊரில் சென்று சண்டித் தனம் காட்ட கூடாது, மணல் கொள்ளையில் ஈடுபட கூடாது. மக்களுக்காக மட்டுமே செயற்பட வேண்டும்.
முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே இடம் பெறவுள்ளது. ஒரு சிலர் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கின்றனர். ஆனால் முதலில் ஜனாதிபதித் தேர்தலே இடம்பெற வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாது ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார் முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும் என்று.
நோன்பு பண்டிகை நிறைவடைந்த பின்னர், மட்டக்களப்பில் ஜனாதிபதி தலைமையில் பாரிய கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
விவசாயிகளை ஊக்குவிக்க பல திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். யார் வந்தாலும் மக்களின் குறைகளை தீர்க்க கூடிய ஜனாதிபதி எமது கட்சியிலே இருக்கின்றார்” இவ்வாறு பாலித்த ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.