சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்டதால், படத்துக்கு அபராதம்... அதிகாரிகள் அதிரடி !

20.03.2021 09:13:38

திண்டுக்கல்லில் நடந்த விஜய்சேதுபதி சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்டதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பஸ்நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று கொண்டிருந்தனர். உடனே அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய சினிமா படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் அங்கு குவிந்தது தெரியவந்தது.

மேலும் அதில் பலர் முக கவசம் அணியவில்லை. இதுமட்டுமின்றி சமூக இடைவெளியை மறந்து அனைவரும் நெருக்கமாக நின்று சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இதனால் கொரோனா பரவும் வகையில் கூட்டம் கூடுவதற்கு காரணமாக இருந்ததாக, சினிமா படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.