இந்தியாவிலிருந்து மேலும் உதவிப் பொருட்கள்.
'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான C-17 விமானத்தின் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 15 தொன் உலர் உணவுகள் மற்றும் 10 தொன் மருந்துகள் அடங்கிய நிவாரணத் தொகுதி கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன், 'சௌர்யா' எனும் இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல் மூலம் 50 தொன் உலர் உணவுப் பொருட்கள் நேற்று (15) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த உணவுத் தொகுதியை இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்குவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதேவேளை, "சாகர் பந்து"நடவடிக்கையின் கீழ் நாட்டுக்கு வருகை தந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் தமது மனிதாபிமான நடவடிக்கைகளை நிறைவு செய்து கடந்த (14) ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அக்குழு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை பங்களிப்பு இதன்போது பாராட்டப்பட்டது.