மருதோடை குளத்தில் கல் அகழ முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு

15.09.2021 04:09:28

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதோடை குளத்தில் கல் அகழ்வதற்கு அனுமதி கோரியமையால் அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வவுனியா மருதோடை மற்றும் வேலர் சின்னக்குளத்தின் அருகாமையில் ஏற்கனவே அரசியல்வாதி ஒருவரின் ஆதரவில் 100 அடிக்கும் கூடுதலாக கல் அகழ்வு முன்பு மேற்கொண்டுள்ளனர். இதன் மூலமாக அகழப்பட்ட பகுதியில் 80 அடிக்கும் மேலாக நீர் தேங்கி உள்ளதுடன், இவ் இரு குளங்களுக்குமான நீர்வரத்து குறைவடைந்து நீர் வற்றும்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்குளத்தின் கீழ் சுமார் 120 ஏக்கர் வயல்காணி காணப்படுவதுடன் இருபோக பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ஒருபோக பயிர்ச்செய்கை கூட செய்வதற்கு நீர் பற்றாக்குறையாக உள்ளதாக இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இவ்வாறு ஆழமாக கல் அகழ்வதனால் இதற்கு அருகாமையில் உள்ள 60 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் கிணறுகளிலும் நீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கிய கற்குவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இக்குளத்தின் அலகரை பகுதியில் உள்ள கற்களை அகழ்வதற்கு அனுமதிகள் கோரப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை கல் உடைப்பதற்காக துப்பரவு செய்யும் செயற்பாடு ஆரப்பிக்கப்பட்டமையால் இப்பிரதேச மக்களிற்கும் குறித்த பகுதியினருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதி தொடர்பாக ஆராய்ந்து தீர்வினை பெறும் நோக்குடன் இன்றையதினம் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் விஸ்ணுதாஸன், மேலதிக அரசாங்க அதிபர் சபர்ஜா ஆகியோர் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பாக ஆராய்ந்து இருதரப்பினருடனும் கலந்துரையாடியிருந்தனர்.

அதன்படி குறித்த கல் அகழ்வதற்கு கோரப்பட்ட பகுதியானது கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்டு குளத்தின் எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிக்குள் காணப்படுவதன் காரணமாக கல் அகழ்வதற்கான அனுமதி வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாஸனால் மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.