நீண்ட நாட்களின் பின்னர் வெளிச்சத்திற்கு வந்த விமல் !

12.07.2021 11:11:30

பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவது குறித்தோ அல்லது அவர் அமைச்சுப்பதவி பெற்றுக்கொள்வது குறித்தோ எம்மத்தியில் எந்த முரண்பாடுகளும் இல்லை. 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்த வேளையில் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர்கள் நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என்பதையே நாம் கூறி வந்தோம் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இப்போதும் அதே நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். எனது மௌனத்தின் அர்த்தம் என்னவென்பது ஒரு சிலருக்கு நன்றாக விளங்கும் எனவும் அவர் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் பங்காளிக் கட்சிகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளில் பங்காளிக்கட்சிகள் வெளிப்படையாக விமர்சனக் கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ஸ நீண்ட நாட்களுக்கு பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தொடரந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவது குறித்தோ அல்லது அவருக்கு அமைச்சுப்பதவி வழங்குவது குறித்தோ எம்மத்தியில் எதிர்ப்பு இல்லை, அதேபோல் அவர் நிதி அமைச்சராகி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார அல்லது அதில் தோல்வி காண்பாரா என்பதையும் என்னால் கூற முடியாது.

எனினும் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் சகலரதும் ஒத்துழைப்புகள் இருக்க வேண்டும். மேலும் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்த வேளையில் அதில் உள்ளடங்கியிருந்த இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர்கள் நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என்பதையே நாம் கூறி வந்தோம்.