மியான்மர் வன்முறை; அமைதி வேண்டி மூத்த பவுத்த பிக்குவின் ஆசிபெற குவியும் மக்கள்
மியான்மர் வன்முறை போராட்டத்தை அடுத்து அமைதி வேண்டி மூத்த பவுத்த பிக்குவின் ஆசிபெற மக்கள் அவரது இருப்பிடம் நோக்கி குவிந்து வருகின்றனர்.
மியான்மர் நாட்டில் கடந்த எட்டு மாத காலமாக வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது. மியான்மர் நாட்டு ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் நாட்டை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆங் சன் சூ காய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி ராணுவ ஆட்சியை நடத்தி வருகின்றனர் அந்நாட்டு ராணுவத்தினர். இதனை எதிர்த்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் ராணுவத்தினரால் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் பல இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்துவரும் நிலையில் நிலைமை இன்னும் சீராகவில்லை. மியான்மர் நாட்டில் பௌத்த பிக்ஷுக்கள் பலர் வசித்து வருகின்றனர். அமைதியே உருவான இவர்கள் வாழும் மியான்மரில் தற்போது வன்முறை வெறியாட்டம் நடந்து வருவது தான் சோகம்.
கடந்த ஆறு மாத காலமாக ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் ராணுவத்தினரின் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது அவர்கள் பௌத்த மார்க்கத்தை தேடி செல்கின்றனர். நாட்டில் அமைதி நிலவும் தங்களது இன்னல்களில் இருந்து விடுபடவும் எண்பது வயதான மூத்த பௌத்த துறவியான மகாபோதி பயான் சடா-வை ஆயிரக்கணக்கான குடிமக்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.