2029க்கு முன்கூட்டியே வருகிறதா பாராளுமன்ற தேர்தல்?
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை 2029-ஆம் ஆண்டிலேயே முதல் கட்டமாக செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைமுறை மற்றும் அரசமைப்பு சட்ட சிக்கல்கள் காரணமாக இதை முழுமையாக 2034-ஆம் ஆண்டில்தான் செயல்படுத்த முடியும் என முன்பு கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு முன்பாகவே நடவடிக்கைகளை தொடங்கும் முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான அரசமைப்புத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் பி.பி. சௌத்ரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவற்றை கலைத்து, 2029 மக்களவை தேர்தலுடன் இணைந்து தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், 2027 முதல் 2031 வரை பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்கிடையே, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் இந்த மசோதா அரசமைப்புக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளனர்.
மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.