
அயோத்தியில் மெழுகு அருங்காட்சியகம்.
அயோத்தியில், ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில் ராமாயண கேரக்டர்கள் கொண்ட மெழுகு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இது அயோத்தியின் கலாச்சார அடையாளத்திற்கு மேலும் ஒரு ஈர்ப்பை சேர்க்கும்.
ராமர் கோயில் பரிகிரம பாதைக்கு அருகில் 10,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகம், பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு தனித்துவமான கலாச்சார மற்றும் வரலாற்று அனுபவத்தை வழங்க உள்ளது. இதுவரை, இந்தத் திட்டத்திற்காக சுமார் 7.5 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் சுமார் 50 முக்கிய ராமாயண கதாபாத்திரங்களின் மெழுகு சிலைகளைக் காட்சிப்படுத்தும். இதில், ராமர், சீதா தேவி, லட்சுமணன், அனுமன், சுக்ரீவன் மற்றும் ஜடாயு போன்றோரின் சிலைகள் இடம்பெறும். ஒவ்வொரு சிலையும் யதார்த்தமான தோற்றம், நுட்பமான முகபாவங்கள் மற்றும் வரலாற்று துல்லியத்துடன் வடிவமைக்கப்படுகின்றன.
ராமர்-ராவணன் போர், சீதையின் கடத்தல், அனுமனின் லங்கா பயணம், மற்றும் ராமர் சேது கட்டுமானம் போன்ற முக்கிய நிகழ்வுகளும், மெழுகு கலைநயம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் உருவாக்கப்பட உள்ளன. இந்த அனுபவத்தை மேம்படுத்த ஒலி-ஒளி விளைவுகளும், ஊடாடும் காட்சிகளும் பயன்படுத்தப்படும்.