வேப்பேரி விடுதியில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி

04.08.2022 11:08:25

‘சல்பைடு’ ஆசிட் என்ற திரவத்தை இரவு உணவில் கலந்து சாப்பிட்டதால் மாணவிகள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மாணவிகள் இருவரும் நலமுடன் இருப்பதால் விடுதிக்கு விரைவில் திரும்புவதாக கல்லூரி தரப்பில் தெரிவித்தனர். சென்னை: சென்னை வேப்பேரியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி உள்ளது. அதன் அருகே கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கி படிக்க தனித்தனியே விடுதி வசதியும் உள்ளன

. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு தங்கி கால்நடை மருத்துவ படிப்புகளை படித்து வருகிறார்கள். இந்த நிலையில் விடுதியில் நேற்று இரவு 2 மாணவிகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த சக மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர்கள் இருவரையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்தில் உணவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது. 'சல்பைடு' ஆசிட் என்ற திரவத்தை இரவு உணவில் கலந்து சாப்பிட்டதால் அவர்கள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பெரியமேடு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

மாணவிகள் இருவரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர் என்று விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலைக்கு முயன்ற 2 மாணவிகளும் தோழிகள் அவர்கள் எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார்கள் என்ற விவரத்தை கூற விரும்பவில்லை.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது அவர்களுக்கு எவ்வித தகவலையும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. மாணவிகள் இருவரும் நலமுடன் இருப்பதால் விடுதிக்கு விரைவில் திரும்புவதாக கல்லூரி தரப்பில் தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.