தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்குப்பிடி கேள்வி!
|
தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை, அரசரடி ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ள நொச்சி ஓடை பகுதியில், பல தலைமுறைகளாக தங்கள் வாழ்விடத்தை கொண்டு பாரம்பரிய விவசாயம் மற்றும் வனப் பொருட்களைச் சேகரித்து பலியர் என்ற வகை பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக மேகமலை, வருசநாடு, தும்மகுண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 98 மலைக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். |
|
இந்த சூழலில், புலிகள் காப்பகத்தில் 4,601 பேர் சுமார் 5,072 ஹெக்டேர் வன நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக வனத்துறை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதில் 118 அரசு ஊழியர்களும் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வேண்டும் என ஜான் கென்னடி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மேலும், மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தரக் கோரியும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மே 29ஆம் தேதி, மலைக்கிராமங்களை ஆக்கிரமித்தாகக் கூறி அந்த கிராம மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குத் துணை ராணுவப் படையையும் பயன்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி அப்பகுதியில் வாழும் 4,000க்கும் மேற்பட்ட கிராம மக்களை வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்று (29-09-26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘மேகமலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டனவா? ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், தமிழ்நாடு அரசு தரப்பில் ஏற்கெனவே அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற விஷயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘தமிழக அரசினுடைய அறிக்கை இலவம்பஞ்சு தோட்டங்களுக்கு ஆதரவாக உள்ளது. இலவம்பஞ்சு தோட்டங்கள் அமைக்க வேண்டும் என்றால் அவர்களுடைய சொந்த நிலங்களில் அமைக்க வேண்டியது தானே? வனப்பகுதியை ஆக்கிரமித்து தான் அமைக்க வேண்டுமா? சூழலியலுக்கு வனப்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அதை பாதுகாக்க வேண்டும்’ என்று தெரிவித்து இவ்வழக்கை ஒத்திவைத்தனர். |