கனடாவில் பேட்டரியில் இயங்கும் பள்ளிப் பேருந்தில் தீ!

10.09.2025 14:18:24

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியலில் பள்ளி மாணவ மாணவியர் பயணிக்கும் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது. நேற்று காலை 8.00 மணியளவில், விக்டோரியா அவென்யூவுக்கு அருகே நின்றுகொண்டிருந்த பள்ளிப்பேருந்து ஒன்றில் ஐந்து சிறுபிள்ளைகள் அமர்ந்திருந்திருக்கிறார்கள்.

அப்போது, ஏதோ வித்தியாசமான வாசம் வீசுவதையும், பேருந்தின் முன் பக்கத்திலிருந்து புகை வருவதையும் கவனித்த பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பிள்ளைகளை பேருந்திலிருந்து இறக்கி பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் கொண்டு விட்டு விட்டு அவசர உதவியை அழைத்துள்ளார்.

அவர்கள் பேருந்திலிருந்து இறங்கிய சிறிது நேரத்தில் பேருந்து பயங்கரமாக தீப்பற்றி எரியத் துவங்கியுள்ளது.

சரியான நேரத்தில் சமயோகிதமாக முடிவெடுத்த ஓட்டுநரால் ஐந்து பிள்ளைகள் உயிரும் அவரது உயிரும் காப்பாற்றப்பட்டுள்ளது.

அந்த பேருந்து பேட்டரியில் இயங்கும் பேருந்து ஆகும். ஆனால், பேட்டரியில் ஏற்பட்ட பிரச்சினையால் தீப்பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ள தீயணைப்புத்துறையினர், பேட்டரி தீயால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.