உக்ரைனில் மேற்கத்திய ஆதரவு அரசியல்வாதி சுட்டுக்கொலை!

31.08.2025 10:43:18

உக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் லிவிவ் நகரில் அந்நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். உக்ரைனின் அரசு பொது ஊடகமான சஸ்பில்னே வழங்கிய தகவலில், உணவு டெலிவரி ஊழியரின் உடையில் வந்து தாக்குதல்தாரி இந்த பயங்கரத்தை நடத்தி விட்டு மின்சார இருசக்கர வாகனத்தில் தப்பியோடி இருப்பதாக தெரியவந்துள்ளது.

54 வயதான ஆண்ட்ரி பருபி துப்பாக்கி குண்டு காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

2013 முதல் 2014ம் ஆண்டு காலகட்டத்தில் ஆண்ட்ரி பருபி யூரோமைடன்(Euromaidan) என்ற போராட்டத்தின் தலைவராக செயல்பட்டார்.

இந்த போராட்டம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருக்கமான உறவிற்கு மிகவும் உதவியது.

மேலும், 2014ம் ஆண்டு ரஷ்யா நடத்திய கிரிமியா போரின் போது ஆண்ட்ரி பருபி நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக செயல்பட்டார்.

மேலும் 2016 முதல் 2019 வரை உக்ரைன் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பருபி செயல்பட்டார்.

ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கடுமையான கண்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான அனைத்து படைகளும் பயன்படுத்தப்படும் என்றும் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.