மோசடி வழக்கில் விஜயநல்லதம்பி மீண்டும் கைது!
முன்னாள் (அதிமுக) சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி விஜயநல்லதம்பி ஆவார். இவர் பலரிடம் பண மோசடி செய்வது, பிறர் மீது மோசடி புகார் தருவது, மோசடி புகாருக்கு ஆளாகி கைதாவது, வாடிக்கையாக நடந்து வருகிறது. விஜயநல்லதம்பி, தற்போதைய விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரனின் தம்பியும் ஆவார். இவர், பஞ்சாயத்துத் தலைவர், யூனியன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், அதிமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்புகளை வகித்தவர். |
விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அரசு வழக்குரைஞராகவும் இருந்தவர். தன்னிடம் டிரைவராக வேலைபார்த்த தங்கதுரையின் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.5 லட்சத்தை வாங்கிய விஜயநல்லதம்பி, சொன்னபடி நடந்துகொள்ளவில்லை. அப்போது விஜயநல்லதம்பி பணம் பெற்றுக்கொண்ட வீடியோ பதிவை, 3-12-2022இல் ‘அரசு வேலை மோசடி; அதிமுக ஒ.செ. பணம் வாங்கிய வீடியோ ஆதாரம்; கில்லாடி நல்லதம்பி’ என்னும் தலைப்பில் வெளியிட்டு, அந்த மோசடியை முதன்முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் இணையதளம். எத்தனை மோசடி புகார்கள் வந்தாலும், விஜயநல்லதம்பி விஷயத்தில் காவல்துறை அத்தனை கடுமை காட்டுவதில்லை. நீதித்துறை வட்டாரத்தில் பெரிய அளவில் முன்பிருந்த பழக்கத்தின் காரணமாக, விஜயநல்லதம்பியை காவல்துறை நெருங்குவதற்கு முன்பாகவே, அவருக்குத் தகவல் போய்விடும் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர், தன்னுடைய சகோதரி மகனுக்கு ஆவினில் மேனேஜர் வேலை வாங்கித்தர, விஜயநல்லதம்பியிடம் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். வேலை வாங்கித்தராத நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, பணத்தைத் திருப்பிக்கொடுக்காததால், விஜயநல்லதம்பி மீது மோசடி புகார் கொடுத்தார். காவல்துறை விசாரித்தபோது, குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதியளித்தார் விஜயநல்லதம்பி. சொன்னபடி ரவீந்திரனுக்கு பணம் கொடுக்காத நிலையில், காவல்துறையிடம் ‘பலபேரிடம் வாங்கிக் கொடுத்த ரூ.3 கோடியை ராஜேந்திரபாலாஜி திருப்பித்தரவில்லை.’ என்று கூலாகப் புகார் கொடுத்து அப்போது நழுவ முயற்சித்தார் விஜயநல்லதம்பி. காவல்துறையும் விஜயநல்லதம்பி அளித்த புகாரின் அடிப்படையில், அப்போது தேடுதல் வேட்டை நடத்தி ராஜேந்திரபாலாஜியைக் கைது செய்தது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளிவந்ததும், “என் மீதான வழக்கு முழுக்க முழுக்கப் பொய்யானது. விஜயநல்லதம்பியிடம் பொய்ப்புகாரைப் பெற்று அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுக அரசு என்னைக் கைது செய்தது. இவ்வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு நான் குற்றமற்றவன் என்பதை நிரூபணம் செய்வேன்.” என்று நக்கீரனுக்குப் பேட்டியளித்தார். இதே ரீதியில், தன் உடன்பிறந்த அண்ணன் ரவிச்சந்திரன் மீதும் பொய்ப்புகார் அளித்தவர்தான் விஜயநல்லதம்பி. ரவீந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2022ல் கைதான விஜயநல்லதம்பிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. சமீபத்தில் ஆளும்கட்சியான திமுகவில் சேர்ந்தார் விஜயநல்லதம்பி. ஆனாலும், ஜாமீன் ரத்தான நிலையில், தலைமறைவாக இருந்த விஜயநல்லதம்பியை பணமோசடி வழக்கில் (07.10.2024) காவல்துறை கைது செய்திருக்கிறது. கைதான விஜயநல்லதம்பியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், 2வது முறையாக மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். |