
“உள்துறை அமைச்சர் தன்னுடைய பொறுப்பை மறந்து பேசி இருக்கிறார்”.
எதிர்கட்சி கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கான ஆதரவு கூட்டம் சென்னையில் இன்று (24.08.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “எதிர்கட்சிகளின் சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டிருக்கிறார். பாஜகவினர் அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க நினைக்கிற இந்த நேரத்தில் அரசியல் சட்டத்தை பாதுகாத்த நீதி அரசரான இவர் அதை பாதுகாக்கிற பொறுப்புக்கு தேவைப்படுகிறார். சுதர்சன் ரெட்டியை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டோட உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க கூடியவர். |
அதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் அவர் பேசியதை சுருக்கமாக சொல்லணும் என்றால், ‘இது திருவள்ளுவர், பாரதியார் பெரியார் , கலைஞர் ஆகியோருடைய மண். போராட்ட குணத்தை இந்த மண் எப்போதும் விடுவதில்லை. புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிரா கபோராடுவது நம்முடைய கடமை. இது இந்த தேசத்துக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இவர்கள் கொண்டுவர நினைக்கிற தேசிய கல்வி கொள்கை மனித மாண்புகளுக்கு எதிரானது நான் எனது என்னுடையது என்ற கலாச்சாரத்தை மட்டுமே இது உருவாக்கும். பன்முக தன்மையோ கல்வியின் ஜனநாயக பரவலையோ இது உருவாக்க உருவாக்காது’ என்று தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து தமிழ்நாட்டோட உணர்வுகளை உறுதியோடு வெளிப்படுத்தினார். இப்படி அரசியலமைப்பு சட்டத்துக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் முற்போக்குக்காகவும் மக்களுக்காகவும் பேசுபவரை நாம் முன்மொழிய இதை விட பெரிய காரணம் தேவையா?. ஆனால் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசரை, உள்துறை அமைச்சர் என்னன்னு விமர்சிக்கிறார் நக்சல் என்று சொல்லுகிறார். உள்துறை அமைச்சர் தன்னுடைய பொறுப்பை மறந்து முன்னாள் நீதியரசர் பற்றி அபாண்டமாக பேசி இருக்கிறார். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அந்த கையாலாகாத நிலையை மறைக்க நீதியரசர் மேல் பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்” எனப் பேசினார். இந்நிகழ்வில் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா நாசீர் உசேன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். |