நடிகர் சிவக்குமார் வெளியிட்ட 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்'

07.05.2024 07:03:00

தமிழ் திரையுலகில் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ஸ்ரீகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன்- ஆன்மீக சொற்பொழிவாளர்- பன்முக திறமையாளர் சிவக்குமார் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

'உதயகீதம்', 'நினைவே ஒரு சங்கீதம்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கே. ரங்கராஜ் சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்'. இந்த திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், டெல்லி கணேஷ், கே. ஆர். விஜயா, சச்சு, 'பருத்திவீரன்' சுஜாதா ஆகியோருடன் பூஜிதா மற்றும் நிமி இம்மானுவேல் எனும் இரண்டு இளம் பெண்கள் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் 'மை இந்தியா' வி. எஸ். மாணிக்கம் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' காந்தியும் ஹிட்லரும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்?. இப்படி இருக்கும் சூழலை கடந்து செல்லும் சில மனிதர்களின் கதை தான் இது. உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் துணிச்சல் தான் வாழ்க்கை. அது வலியை ஏற்படுத்தக்கூடும். அப்படியொரு அனுபவத்தை எதிர்கொள்ளும்  கதாபாத்திரங்களை ஐந்து கோணங்களின் வழியாக பார்வையாளர்களுக்கு சொல்லும் திரைப்படம் தான் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்'' என்றார் .

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில் படத்தின் தலைப்பிற்கு ஏற்ற வகையில் காதலும் மோதலும் என இணைந்து வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.