மண்ணாங்கட்டி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

10.05.2024 07:00:00

தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மண்ணாங்கட்டி 1960 முதல்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்கள்.

 

இயக்குநர் டியூட் விக்கி இயக்கத்தில் உருவாகி வரும் 'மண்ணாங்கட்டி 1960 முதல் ' எனும் திரைப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, நாகேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லட்சுமணன் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியதுடன், அதனை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள். மேலும் இதைத் தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து கடந்தாண்டில் வெளியான 'இறைவன்' மற்றும் 'அன்னப்பூரணி' ஆகிய இரண்டு படங்களும் பாரிய வெற்றியை பெறாததால்  அவருடைய ரசிகர்கள் கவலையடைந்திருக்கிறார்கள். மேலும் 'மண்ணாங்கட்டி' எனும் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றால் தான் லேடிஸ் சுப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.