குண்டுகளை எதிர்கொண்டுள்ளேன்; மம்தா பானர்ஜி பேச்சு
உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மேலும் 2 கட்ட தேர்தல் மட்டுமே மீதமுள்ளது. குறிப்பாக பூர்வாஞ்சல் பகுதிக்கு உட்பட்ட 111 தொகுதிகளை தவிர மீதமுள்ள 292 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்து உள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 6-வது கட்டமாக நடைபெறும் 57 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, வாரணாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு முன் கங்கார ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று வந்தபோது, அவருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களை எழுப்பியபடியும், கருப்பு கொடி காட்டியும் ஆர்ப்பாட்டத்தில் சிலர் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, தஷாஷ்வமேத படித்துறையிலேயே அவர் அமர்ந்தபடி கங்கா ஆரத்தி நிகழ்ச்சியை கண்டார். அவரை நாற்காலியில் அமரும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியபோதும், அவர் படிகளிலேயே அமர்ந்து கொண்டார்.
இந்நிலையில், வாரணாசியில் இன்று பேசிய மம்தா, தங்களது எண்ணத்தில் ரவுடியிச சிந்தனையை கொண்டுள்ள பா.ஜ.க. தொண்டர்கள் சிலர் என்னுடைய வண்டியை தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் எனது காரை கம்புகளால் அடித்தபடி, திரும்பி போ என கூறினர். அதன்பின் அவர்கள் சென்று விட்டனர் என நான் உணர்ந்தேன். அவர்களது தோல்வி அடுத்து நடக்க போகிறது.
இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். நான் கோழையல்ல. நான் ஒரு போராளி. என் வாழ்வில் பல முறை அடிதடிகளையும், துப்பாக்கி குண்டுகளையும் நான் எதிர்கொண்டுள்ளேன். ஆனால், ஒருபோதும் தலை வணங்கியதில்லை. அவர்கள் நேற்று என்னை சூழ்ந்தபோது, அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதற்காக, காரை விட்டு கீழே இறங்கி அவர்களை எதிர்கொண்டேன். அவர்கள் கோழைகள் என்று பேசியுள்ளார்.