அமெரிக்கா விமர்சனம்: சீனா கடும் கண்டனம்
நாட்டுக்கு வலிமையான தலைமை நீடிக்க வேண்டும் என்பதற்காகவே அதிபர் ஜிங்பிங்கின் பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை சர்வாதிகாரம் என விமர்சிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ஜனநாயகத்துக்கான காப்புரிமை வழங்கப்படவில்லை' என, சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் பல ஆண்டுகளாக சீன கம்யூ கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியின் பொதுச் செயலராக இருப்பவரே, நாட்டின் அதிபராகவும் இருப்பார்.சீன அதிபராக ஷீ ஜிங்பிங், கடந்த ௨௦௧௨ல் பதவியேற்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாசேதுங்குக்கு பின், சீனாவின் வலிமையான தலைவராக ஜிங்பிங் கருதப்படுகிறார்.இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிய இருந்தது.
இப்போதுள்ள சூழ்நிலையில் ஜிங்பிங்கே அதிபராக தொடர, சீன கம்யூனிஸ்ட் விரும்பியது. இதையடுத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், சீன அதிபராக மூன்றாவது முறையாக ஜிங்பிங் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதை கடுமையாக விமர்சித்திருந்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் இப்போதுள்ள சூழ்நிலையில் சீனாவுக்கு வலிமையான தலைமை அவசியம். அதனால் மூன்றாவது முறையாக அதிபராக ஜிங்பிங் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.சீனாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். 10 கோடி உறுப்பினர்கள் உடைய சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதை சர்வாதிகாரம் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறுவது வேடிக்கை. நாட்டுக்கு நாடு, பிராந்தியத்துக்கு பிராந்தியம் ஜனநாயகம் மாறுபடுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கூட ஜனநாயகம் ஒரே மாதிரியாக இல்லை. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த காப்புரிமை வழங்கப்பட வில்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.