
ஒட்டர் சமூகத்துக்கு இழிவு : சூர்யா படத்துக்கு எதிர்ப்பு
ஜெய் பீம் படத்தில் ஒட்டர் சமூகத்தை இழிவுபடுத்திய காட்சிகளை நீக்கா விட்டால் டைரக்டர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என உழைக்கும் மக்கள் விடுதலை கழக நிறுவன தலைவர் தேக்கமலை தெரிவித்தார்.
கரூரில் அவர் அளித்த பேட்டி: அமேசான் இணையதளத்தில் ஜெய் பீம் என்ற படம் வெளியாகியுள்ளது. சூர்யா நடித்து ஞானவேல் என்பவர் இயக்கி உள்ளார். அதில் ஒட்டர் சமூகம் உட்பட பல சமூகத்தினரை இழிவுபடுத்தி ஓரமாக நிற்க வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி ஒட்டர் சமூக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நாட்டின் கட்டுமான வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வரும் ஒட்டர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும். மேலும் அந்த காட்சியில் போலீசார் பொய் வழக்கு போட ஒட்டர் சமூகத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் வசனம் இடம் பெற்று உள்ளது. அதையும் நீக்க வேண்டும். இல்லை என்றால் சென்னையில் டைரக்டர் ஞானவேல் வசிக்கும் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.