‘ஊராட்சிகள், பேரூராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு’
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள சி. கொத்தங்குடி, உசுப்பூர், பள்ளிப்படை, லால்புரம், சி. தண்டேஸ்வர நல்லூர், அண்ணாமலை நகர் பேரூராட்சி உள்ளிட்ட 8 ஊராட்சி 1 பேரூராட்சியைச் சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்து சிதம்பரம் நகராட்சியைப் பெருநகராட்சியாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. |
இதற்கு ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் நகராட்சியுடன் இணைத்தால் தேவையான அடிப்படை வசதிகள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காது என லால்புரம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் 100க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணியை அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று சி. கொத்தங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அம்சா வேணுகோபால் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் ஜான்சிராணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேணுகோபால், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஊராட்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சியுடன் சி.கொத்தங்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதே போல் லால்புரம், சி தண்டேஸ்வர நல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதோடு அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராம சபைக் கூட்டங்களில் பேசிய பொதுமக்கள் சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் வீட்டு வரி உயர்வு, அடிப்படை வசதிகள் உடனடியாக கிடைக்காது, தற்போதுள்ள தலைவர்களைச் சந்தித்து குறைகளைக் கூறி உடனடியாக நிவர்த்தி செய்வதுபோல் செய்யமுடியாது, 100 நாள் வேலை ரத்தாகிவிடும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். |