ஜெர்மனி: பிரபல ஓட்டலில் அமைந்த உலகின் மிக பெரிய மீன் தொட்டி வெடித்து சிதறல்
ஜெர்மனியில் பிரபல ஓட்டலில் இருந்த 50 அடி உயர உலகின் மிக பெரிய மீன் தொட்டி திடீரென வெடித்து உள்ளது.
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் அலெக்சாண்டர்பிளாட்ஸ் என்ற இடத்தில் மத்திய சதுக்கம் பகுதியில் ரேடிசன் புளூ என்ற பிரபல ஓட்டல் ஒன்று அமைந்து உள்ளது. இதில், கடந்த 2003-ம் ஆண்டு 50 அடி உயரத்தில், 30 அடி அகலத்தில் உலக அளவில் மிக பெரிய மீன் தொட்டி கட்டப்பட்டது. அந்த காலத்தில் ரூ.115.82 மதிப்பில் உருவான இந்த மீன் தொட்டி கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று உள்ளது.
மீன் தொட்டியில் 100 வகையான மீன்கள் என மொத்தம் 1,500 மீன்கள் வரை, பார்வைக்காக வளர்க்கப்பட்டு வந்துள்ளன. இந்த ஓட்டலில் தங்க வருபவர்கள், உருளை வடிவில் அமைந்த மீன் தொட்டியின் கண்ணாடி பகுதியின் வழியே, உள்ளே நீந்தி செல்ல கூடிய கடல்வாழ் மீன் இனங்களை பார்வையிட இயலும். இந்த நிலையில், காலை வேளையில் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து கொண்டிருந்தவர்களுக்கு திடீரென வெடிவிபத்து போன்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்துள்ளனர்.
அதன்பின்னரே, அந்த மீன் தொட்டி வெடித்துள்ளது என தெரிய வந்துள்ளது. உடனடியாக 300 பேர் வரை ஓட்டலை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்ததும், அந்த பகுதியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு விட்டனர் என தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்து உள்ளது. அந்த ஓட்டலில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினரான சாண்டிரா வீசர் கூறும்போது, அந்த மீன் தொட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வெளியேறி உள்ளது. மீன்களும் வெளியே தெருக்களில் வந்து விழுந்துள்ளன. குளிரால் உறைந்த நிலையில், பல மீன்கள் இறந்துள்ளன.
அதற்கு முன்பு, அவற்றை காப்பாற்றி இருக்கலாம் என கூறியுள்ளார். இதில், உயிர் பிழைத்த மீன்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இது, திட்டமிட்ட தாக்குதல் இல்லை என கூறும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.