தடுப்பூசி போட்டால் உயிரிழக்க 11 மடங்கு வாய்ப்பு குறைவு

11.09.2021 15:49:45

‛கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் கோவிட் தொற்றால் உயிரிழக்க 11 மடங்கு வாய்ப்பு குறைவு,'' என, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவிட் டெல்டா வைரசால் பல நாடுகளில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க நோய்த் தடுப்பு மைய இயக்குநர் ரோச்சல்லா வெலன்க்சி தெரிவித்து உள்ளதாவது:தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டதில், கோவிட் தடுப்பூசிகள் சிறப்பாக வேலை செய்வது தெரியவந்துள்ளது. கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் தொற்றால் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவு. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் செலுத்திக் கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 10 மடங்கு வாய்ப்பு குறைவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.