போராட்டகாரர்களுக்கு இறுகும் பிடி!

31.07.2022 02:41:30

ஹோட்டல் அறைகளை பலவந்தமாக பிடித்த போராட்டகாரர்கள்

போராட்டத்தின் ஆரம்பம் முதல், கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மூன்று அறைகளை கட்டாயமாக பயன்படுத்திய செயற்பாட்டாளர்கள் குறித்து காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, அதிபர் மாளிகைக்குள் நுழைந்து சேதம் விளைவித்த 100க்கும் மேற்பட்டோரின் கைரேகைகளை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

வெளிநாடு செல்ல முற்பட்டால் அவர்களை இனங்காணுவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இந்த கைரேகை பதிவுகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இணையவசதியை பயன்படுத்தி தொலைபேசி அழைப்பு

 

போராட்டகாரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றிய பின்னர், அங்குள்ள வை-பை யை பயன்படுத்தியமை மற்றும் இணையவசதியை பயன்படுத்தி சந்தேகத்திற்குரிய வகையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட பலரிடமும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.