’இலங்கை மற்றுமொரு கென்யாவாக மாறியிருக்கும்’

29.06.2024 09:32:50

பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன. நாட்டுக்குள் பொருளாதார நிலைமை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையின் நிலைமையும் அவ்வாறுதான் இருந்திருக்கும் என்று ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் செய்து பயனில்லை. உக்ரைனில் போரை நிறுத்துமாறு நாங்கள் கோருகிறோம். காஸாவில் போரை நிறுத்துங்கள். அந்தப் போரை நிறுத்தி 05 வருடங்களில் பலஸ்தீன அரசை உருவாக்குங்கள். அதேபோன்று, இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை எடுங்கள்.

ஆனால், இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது அது பற்றிய உலகின் தெற்கில் குரல் எழுப்புவதாகும். இந்தப் போரை நிறுத்தி ஆபிரிக்க நாடுகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்களில் கென்யாவில் நடந்த கலவரங்களைப் பார்த்தோம். தற்போது சுமார் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யவில்லை என்றால் ஏற்படும் நிலைதான் இது. இலங்கையில் இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்காவிடின் நாமும் இதே நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கும்.

எனவே, இந்தப் பணத்தை அந்த நாடுகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு இலங்கை முழுமையாக ஆதரவளிக்கிறது. அத்தகைய உதவியை இலங்கை எதிர்பார்க்கவில்லை. இலங்கை தனது கடனை மறுசீரமைத்து முன்னோக்கிச் செல்கிறது. அதற்குத் தேவையான ஆற்றலும் அறிவும் நம்மிடம் உள்ளது. அந்தப் பாதையில் நாம் தொடர வேண்டும். அதன்போது, நாம் போட்டிமிக்க, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். நமது சக்தியுடன் அந்தப் பயணத்தை நாம் மேற்கொள்வோம் என்றார்.