பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

11.09.2025 09:49:25

எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒழுங்கற்றது என அறிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அதனை ஏற்க முடியாதெனக் கூறி புதன்கிழமை (10) நிராகரித்தார்.

அதுதொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசியலமைப்பு மற்றும் நிலையியற்கட்டளைகளை சுட்டிக்காட்டி கருத்துரைத்தனர்.

இதனிடையே எழுந்த ஆளும் கட்சியின் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க கருத்து கூறிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சியினர் எழுந்து, கூச்சலிட்டனர்.

சபையை கொண்டு நடத்துவதற்கான சூழல் இன்மையில், பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக  அறிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அக்கிராசனத்தில் இருந்து எழுந்து சென்றுவிட்டார்.