25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தலைவன் தலைவி.

17.07.2025 06:15:00

‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி:’ எனும் திரைப்படம் – தற்போதைய சமூகத்தில் கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாட்டையும், இதனைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொள்ளும் விவாகரத்து முடிவுகள் குறித்து பேசும் உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தலைவன் தலைவி ‘ படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், செம்பொன் வினோத், ரோஷினி ஹரி ப்ரியன், யோகி பாபு, தீபா சங்கர் குழந்தை நட்சத்திரம் மகிழினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ஃபீல் குட் ஃபேமிலி எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டிஜி தியாகராஜன் – செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.

இயக்குநர் பாண்டிராஜ் படத்தைப் பற்றி பேசுகையில், ” எம்முடைய பிள்ளைக்கு பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்றோம். அந்த தருணத்தில் சந்தித்த உண்மை சம்பவத்தை தழுவி ஆகாச வீரன் – பேரரசி என்ற இரண்டு கதாபாத்திரங்களை மையப்படுத்தி கதை எழுத தொடங்கினேன்.

திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவி இடையேயான புரிதலுடன் கூடிய அன்பை பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் இடைவெளியை பற்றியும்… கணவன் – மனைவி இடையேயான கருத்து முரண்படுகளை பற்றியும், தற்போதுள்ள சமூகத்தில் திருமணமான தம்பதிகள் விவாகரத்து என்ற முடிவை மேற்கொள்வதற்கும் முன் சிறிது பொறுமையும், விட்டுக் கொடுத்தலும் இருந்தால்… வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற விடயத்தை விவரிக்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் என நம்புகிறேன். மேலும் ஆகாச வீரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை தவிர வேறு யாராலும் நடித்திருக்க இயலாது” எனவும் தெரிவித்தார்.