குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி?

16.04.2024 07:50:14

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டேயை (Rodrigo Duterte) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐசிசி) தாம் ஒப்படைக்கப்போவதில்லை என அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos) தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி டுட்டார்டே அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

அவர் 2016ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அந்நடவடிக்கைகள் தற்போதைய ஜனாதிபதி மார்கோசின் ஆட்சிக் காலத்திலும் தொடர்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நமக்கு அனுப்பும் கைதாணையை தாம் அங்கீகரிக்கப்போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி மார்க்கோஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்தும் பிலிப்பைன்ஸை மீட்டுக்கொண்டதாகவும், தான் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஆராய ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் மீண்டும் பிலிப்பைன்ஸ் சேராது என தற்போதைய ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos) தெரிவித்துள்ளார்.