ஜெனிவாவில் பாரிய பேரணி!

17.09.2025 08:23:22

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது.

அதேவேளை பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் திருத்தங்கள் உள்வாங்கப்படாத 60ஃஎல்.1 எனும் முதல் வரைவு குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வலியுறுத்தி திங்கட்கிழமை (15) சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்ற நடாத்தப்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்பாகக் கூடினர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பிரதிபலிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சர்வதேச நீதிப்பொறிமுறையைக்கோரி பேரணியாகச் சென்றனர்.