பஞ்சாப்பை தொடர்ந்து காஷ்மீருக்குள் நுழைந்த ராகுல் காந்தி பாதயாத்திரை

19.01.2023 22:36:23

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரை கடைசியாக பஞ்சாப்பில் நடந்து வந்தது. அங்கும் தனது யாத்திரையை நிறைவு செய்துவிட்டு நேற்று மாலையில் லகன்பூர் எல்லை வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தார் ராகுல் காந்தி. லகன்பூர் எல்லையில் மகாராஜா குலாப் சிங் சிலை அருகே அவரை வரவேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, 'காஷ்மீர் மக்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ள இங்கு வந்துள்ளேன். என்னோடு பாதயாத்திரையில் பங்கேற்று, இந்தியாவை பாதுகாப்போம் என்ற எனது திட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்' என கூறினார். தனது மூதாதையர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதால், தனது வீட்டுக்கு திரும்பியது போன்று உணர்வதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். ராகுல் காந்தியின் பாதயாத்திரை காஷ்மீரை அடைந்ததன் மூலம், தனது இறுதி மைல்கல்லை எட்டியுள்ளது. இது காங்கிரசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.