
ரசிகன் முதல் மாஸ்டர் வரை....
நடிகர் விஜய்யின் 47-வது பிறந்தநாளான இன்று, சினிமாவில் அவர் பாடிய பாடல்கள் குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.
நடிப்பு, நடனம், ஆக்ஷன் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரும் விஜய்யின், வசீகர குரலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய்யை பாடகராக அறிமுகம் செய்தது இசையமைப்பாளர் தேவா தான். 1994-ல் வெளிவந்த ரசிகன் படத்தில் இடம்பெற்ற ‘பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி’ என்ற பாடலை பாடகி சித்ராவுடன் இணைந்து பாடியிருந்தார் விஜய்.
இதையடுத்து விஷ்ணு, தேவா, காலமெல்லாம் காத்திருப்பேன், மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், நெஞ்சினிலே என தேவா இசையமைத்த படங்களில் தொடர்ந்து பாடிவந்த விஜய்க்கு, காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெறும் ‘ஓ பேபி பேபி’ பாடலை பாட வாய்ப்பளித்தார் இளையராஜா. அப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
அதுவரை தன் படங்களில் மட்டும் பாடி வந்த விஜய், பின்னர் மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடினார். ரகுவரன் நடித்த ‘துள்ளி திரிந்த காலம்’ படத்தில் ஜெயந்தின் இசையில் ‘டக் டக் டக் டக்’ என்ற பாடலையும், யுவனின் இசையில் வேலை படத்திலும் பாடிய விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பெரியண்ணா படத்திற்காக பாடிய 2 பாடல்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.