பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!

13.06.2024 07:57:39

ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலிக்கு  விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த மாநாடானது இத்தாலியின்  அபுலியா பிராந்தியத்தில் உள்ள சொகுசு விடுதியொன்றில் இன்று, நாளை, மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று தினங்  நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், பிரான்ஸ் ஜனாதிபதி  இமானுவேல் மெக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்ய ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு அமர்வில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாநாட்டில் ரஷ்யா-உக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் குறித்தும், அதனால் உலக நாடுகளில் ஏற்படும் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடி செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.