ஒரே மாதத்தில் கலவரக்காரர்களுக்கு பாடம் கற்பித்த பிரான்ஸ்: 700 பேர் சிறையில் :அடைப்பு

19.07.2023 16:53:47

17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான் இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி கலவரமாக வெடித்தது

பிரான்ஸ் நாட்டில் சென்ற மாத இறுதியில் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து சில மணி நேரங்களில் அந்நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்து, வன்முறை அதிகரித்தது. இக்கலவரம் பிரான்ஸில் 2005-ல் நடந்த கலவரத்திற்கு பிறகு நடைபெற்ற ஒரு மோசமான கலவரம் என வர்ணிக்கப்பட்டது. உயரடுக்கு காவல்துறை சிறப்புப் படைகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட சுமார் 45,000 பாதுகாப்பு படைகளை கொண்டு 4 நாட்களாக பெரும் முயற்சி செய்து நிலைமையை அந்நாட்டு அரசாங்கம் கட்டுக்குள் கொண்டு வந்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து கொண்டனர். இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வழக்குகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. "உறுதியான மற்றும் முறையான செயலாக்கத்தை நாம் காட்ட வேண்டியது மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒழுங்கை மீண்டும் நிறுவுவது அவசியம். நீதிமன்றங்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்" என பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் எரிக் டுபாண்ட்-மோரெட்டி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் கலவரங்கள் தொடர்பாக 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பாராட்டி மோரெட்டி கருத்து கூறும்போது, நீதிபதிகளின் உறுதியான தீர்ப்பை பாராட்டுகிறேன் என தெரிவித்தார். மொத்தம் 1,278 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 95 சதவிகிதத்திற்கு அதிகமானோர் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது, காவல்துறை அதிகாரிகளை தாக்குவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ளனர். 600 பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நீதிமன்றங்கள் வார இறுதியில் வழக்குகளை கையாள்வதற்காக திறந்திருந்தன. கைது செய்யப்பட்ட 3,700 பேரின் சராசரி வயது வெறும் 17 ஆகும். அவர்கள் தனித்தனியாக குழந்தைகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டனர். 2005-ம் ஆண்டு நடந்த பெரும் கலவரத்தின்போது 400 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனை அப்போதைய எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.