கட்டாய வெற்றி நெருக்கடியில் அர்ஜென்டினா மெக்சிகோவுடன் இன்று மோதல்
பலம் வாய்ந்த அர்ஜென்டினா உலகக்கோப்பைத் தொடரில் ஆடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 ('சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. பலம் வாய்ந்த அர்ஜென்டினா உலகக்கோப்பைத் தொடரில் ஆடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த இரண்டு குரூப் போட்டிகளில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற வேண்டும் என்று நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-வது போட்டியில் மெக்சிகோவை இன்று எதிர் கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லுசாயில் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அர்ஜென்டினாவுக்கு உள்ளது. தோற்றால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டி எங்களுக்கு இறுதிப் போட்டியை போல் இருக்கும் என அர்ஜென்டினா அணியின் மார்டினெஸ் கூறியுள்ளார்.