எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்?
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமான விடயம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்வனவு நடவடிக்கைகளின் பிரகாரம், இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலுசக்தி அமைச்சின செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் வர்த்தகக் குறியீட்டின்படி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதன்படி, அங்கு தீர்மானிக்கப்படும் விலைகளுக்கு அமைய இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டுமெனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்தத் தேவையில் சுமார் 35 வீதமான மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுவதால், உலக சந்தை விலைகளுக்கு அமைவாக எரிபொருளின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள முடியாது என வலுசக்தி அமைச்சின செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மசகு எண்ணெய் விலை 27 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த செப்டம்பரில் ப்ரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 94 அமெரிக்க டொலராக காணப்பட்டதுடன், தற்போது 74 டொலராக குறைவடைந்துள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் தெரிவித்துள்ளார்.