சிறுவர்கள், மகளீர் காவல்துறை பணியகத்தை இரண்டு பிரிவுகளாக்க தீர்மானம்!

30.10.2021 03:00:00

உடனடியாக அமுலாகும் வகையில் சிறுவர்கள் மற்றும் மகளீர் காவல்துறை பணியகத்தை இரண்டு பிரிவுகளாக ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள இன்னல்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரதி காவல்துறைமா அதிபர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் இதுவரை இயங்கிய சிறுவர் மற்றும் மகளீர் பணியகம் இரண்டு பிரிவுகளாக செயற்படவுள்ளது.

அதில் ஒரு பிரிவு சிறுவர்கள் மற்றும் பெண்களின் சட்டதிட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் செயற்படவுள்ளது.

அந்த பிரிவிற்கு தனியாக பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.

அத்துடன் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட தவறுகள் குறித்து விசாரணை செய்வதற்காக தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அந்த பிரிவுகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.