தவெகவை அடுத்து அதிமுகவுக்கு மட்டும் தான் வாக்கு அதிகரிச்சிருக்கு.
தமிழக அரசியல் களம் 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஒரு மாபெரும் வாக்கு வங்கி மாற்றத்தை சந்தித்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த புள்ளி விவரங்களின்படி தமிழக வெற்றி கழகம் 2026 இல் 34.92 சதவீத வாக்குகளை பெற்று, தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் சக்தியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மறுபுறம், திராவிட முன்னேற்றக் கழகம் தனது வாக்கு வங்கியில் சரிவை சந்தித்துள்ளது. 2024 இல் 26.93 சதவீதமாக இருந்த திமுகவின் வாக்கு சதவீதம் 2026 இல் 24.19 ஆக குறைந்து, 2.74 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 20.46 சதவீதத்திலிருந்து 21.21 சதவீதமாக உயர்ந்து, 0.75 சதவீத வாக்கு வளர்ச்சியை பெற்று தனது பலத்தை தக்கவைத்துள்ளது.
மற்ற கட்சிகள் அனைத்தும் இந்த தேர்தலில் பெரும் சரிவை சந்தித்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி மிக மோசமாக 8.27 சதவீத வாக்குகளை இழந்து 2.97 சதவீதமாக சுருங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி 7.30 சதவீதத்தை இழந்து 3.37 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4.15 சதவீத சரிவுடன் 4.00 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளன. பாமக 2.17 சதவீதத்துடனும், விசிக 1.09 சதவீதத்துடனும் பின் தங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக, பாரம்பரிய மற்றும் தேசிய கட்சிகளின் வாக்குகள் குறைந்துள்ள நிலையில் தவெகவை அடுத்து அதிமுக மட்டுமே சதவீதத்தை அதிகரித்துள்ளது.