பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், கடந்த ஆட்சியின்போது லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்தும் இன்று (20.09.2024) மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். திருப்பதி ஏழுமையான் கோயிலின் மாண்பு, பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
அதனைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் செய்தியாளர் சந்திப்பில் அளித்திருந்த விளக்கத்தில் 'லட்டுவின் தரத்தை ஆய்வு செய்ய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்திரவிட்டிருக்கிறார். லட்டுக்கான நெய் சப்ளையர்களை அழைத்து எச்சரித்தோம். அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் லட்டுக்கான நெய் பரிசோதனை செய்யப்பட்டது. ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் நான்கு லட்டு நெய் மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது உண்மைதான் என தெரிந்தது' என தெரிவித்தார். அதேநேரம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை எனத் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நெய் தயாரிப்பு நிறுவனமான ஏஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் அதிகாரி ஆய்வு செய்தனர். லட்டு விவகாரம் ஒருபுறம் பூதாகரமாகி வரும் நிலையில் பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க, இப்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்திலிருந்து நெய் வாங்கப்பட்டதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுவதாக தமிழக அரசின் சார்பில் இது சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து தவறான தகவல் பரப்பியதாக பாஜக நிர்வாகி மீது அறநிலையத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய ஏ.ஆர் டெய்ரி புட் நிறுவனம் பழனி கோவிலுக்கும் நெய் தருவதாக தவறான தகவலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தவறாக பரப்பியதாக பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், செல்வகுமார் ஆகியோர் மீது காவல்துறையில் அறநிலையத்துறை புகார் அளித்துள்ளது. |