
பிள்ளையான் செய்த தவறு ஒன்றுமட்டுல்ல!
கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியரை காணாமலாக்கியது மாத்திரமே பிள்ளையான் செய்த ஒரே தவறு என்று தீர்மானம் எடுத்துவிட வேண்டாம். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தடுப்புக்காவலில் வைத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சியினர் வீண் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் மீதான விசாரணைகள் தொடர்பில் எதிர்த்தரப்பிலுள்ளவர்கள் ஏன் இந்தளவு தூரம் அச்சம் கொள்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களமே விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. விசாரணைகளின் அடிப்படையில் சிலர் கைதுசெய்யப்பட்டுமுள்ளனர். சிலரிடம் சாட்சிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பில் எதிர்த்தரப்பினர் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ போன்றோர் பதற்றத்தில் வெவ்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஆறு வருடங்கள் கடந்திருந்தாலும் ஐந்தரை வருடங்கள் வரை விசாரணைகளை மூடிமறைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நாங்கள் தற்போது விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். இந்த ஆறு வருடங்களில் முறையான விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் தற்போது இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் உள்ளிட்ட பின்னணியிலுள்ள சகலத் தரப்பினரையும் நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் கடந்த ஐந்தரை வருடங்களிலும் விசாரணைகளை மூடிமறைப்பதற்காக அமைச்சரவையினூடாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருசில அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்தாமலிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது. விசாரணை அதிகாரிகள் இடமாற்றம் செய்திருந்தார்கள். ஒரு சிலர் இந்த நாட்டில் இருக்க முடியாத நிலையை உருவாக்கியிருந்தார்கள். சாட்சிகளை மூடிமறைத்தார்கள். இந்தக் பின்னணியில் கடந்த ஆறு மாதங்களே விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின்போது ஏற்கனவே மூடிமறைக்கப்பட்ட கண்டுகொள்ளப்படாத விடயங்கள் வெளிப்பட்டுவரும் நிலையில் இவர்கள் அச்சம் கொள்வது மக்களுக்கு புரியுமென்று நம்புகிறோம். எனவே, விசாரணைகள் தொடர்பில் மக்கள் வீண் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில் புதிதாக சிலர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் அடிப்படையில் மேலும் சிலருக்கு அழைப்பாணை விடுக்கப்படலாம். குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இம்முறை முறையாக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது எதிர்த்தரப்பினரின் வீண் அச்சத்திலிருந்தே தெரிகிறது. கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் மாத்திரமே பிள்ளையான் கைதுசெய்யப்படாத நீங்கள் அறிந்து வைத்திருந்தாலும், அவருக்கு எதிராக மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல்வேறு சாட்சிகளும் கிடைத்து வருகின்றன. விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும். எனவே, பேராசிரியரை காணாமலாக்கியது மாத்திரமே பிள்ளையான் செய்த ஒரே தவறு என்று தீர்மானம் எடுத்துவிட வேண்டாம். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தடுப்புக்காவலில் வைத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஒருசில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும். ஒருசில குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும். விசாரணைகளுக்கமைய இருவர் கைதுசெய்யப்பட்டும் இருக்கிறார்கள். எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கோரிவந்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினரும் திருப்தியடையக்கூடியவகையில் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விசாரணைகள் முறையாக இடம்பெறுகின்றன என்பதை திட்டவட்டமாக கூறமுடியும். உரிய நேரத்தில் பிரதான சூத்திரதாரிகளை வெளிப்படுத்துவோம். உதயகம்மன்பில போன்றவர்கள் அச்சம் கொள்கிறார்கள் என்பதற்காக அரசாங்கம் பதற்றமடையாது. உதய கம்மன்பில பிள்ளை யானை சந்தித்துவிட்டு வெளியிட்ட கருத்தினூடாக எவ்வாறான தகவலை வழங்கினார் என்பது சமூக புரிந்துணர்வுள்ள சகலருக்கும் தெரியும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எதனையும் கூறவில்லை என்றே கம்மன்பில கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்படுகிறார்கள் என்றால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எதனையும் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார். கம்மன்பிலவின் அந்த தகவலிலுள்ள ஆழம் என்னவென்பதை குற்றப்புலனாய்வு விசாரணைகள் தொடர்பில் ஓரளவு ஞானம் இருப்பவர்களுக்கு புரியும். அது எங்களுக்கு அவசியமில்லை. இன்னும் சிறிது காலம் செல்லும்போது விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தின் பாரதூரம் எவ்வளவு காலத்திலிருந்து திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும். அதுதொடர்பில் விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன’’ என்றார். |