பிஞ்சு குழந்தைகளை காவி உடையுடன் நிறுத்தியது யார்?

30.09.2026 08:43:49

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் பிஞ்சுக் குழந்தைகளுக்கு காவி உடை அணிவித்து ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று திக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து மதவெறி காடாக்க நினைக்கும் பாஜகவுக்கு ஒத்துழைக்கும் யாரையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் சாடியுள்ளார். இதுதொடர்பாக திக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நடத்தி, உலக சுற்றுலா நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

அதில், அபிநய நாட்டியாஞ்சலி என்னும் குழுவினருடன் இணைந்து சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்குப் பெயர் 'ராம் யாத்ரா'வாம்! நூற்றுக்கணக்கான குழந்தைகள், கொளுத்தும் வெய்யிலில் போதுமான ஏற்பாடுகளின்றி அவதிப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் காவி உடை அணிவித்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறைக்குக் காவி உடை அணிந்து ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன? மதவெறியைத் தூண்டும் ஆர்எஸ்எஸ்-ம், இந்து முன்னணி வகையறாக்களும் ராமேஸ்வரத்தைத் தொடர்ந்து மதவெறித் தளமாகப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

அதற்கு மத்திய பாஜக அரசும் வழிவகுக்க முயற்சிக்கிறது. இப்போது அந்தப் பாதையில் தவெக அரசு செல்கிறதா? 40 ஆண்டுகளுக்கு முன்பே, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், ராமநாதபுரம் என்பதை 'ராமன்நாடு' என்று ஆங்கிலத்தில் எழுத முயன்று, கடும் எதிர்ப்புகளை எழுப்பி, அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதே ராமன் கதையைச் சொல்லித் தான், தமிழ்நாட்டின் பொருளாதார நலனுக்குப் பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டிய சேதுக் கால்வாய்த் திட்டம், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டது.

பிஞ்சுக் குழந்தைகளைக் காவி உடையுடன் நிறுத்திய அதிகாரிகள் யார்? இதற்கு அனுமதி அளித்த சுற்றுலாத் துறை அதிகாரிகள் யார்? இதில் மிகுந்த அக்கறை காட்டினார் என்று சொல்லப்படுகிறதே, என்ன பின்னணி? தமிழ்நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து, மதவெறிக் காடாக்க நினைக்கும் பாஜகவுக்கு ஒத்துழைப்போர் யாராயினும், அவர்களைத் தமிழ்நாட்டு மக்களும் ஏற்கமாட்டார்கள், வரலாறும் மன்னிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.